Thursday, October 20, 2016

மூலமென்று அழைத்தேனோ யானையைப் போலே - 42


 இந்திரத்துய்மன் என்ற புராணகால பாண்டி வேந்தன் அகத்திய முனிவரைக் குலகுருவாகக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அகத்தியரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியம் செய்தான். அதனால் வெகுண்ட அகத்தியர், இந்திரத்துய்மனை யானையாகப் பிறக்கும்படி சபித்து விட்டார்.

இந்திரத்துய்மன் திரிகூடாசலம் என்ற மலையை அடுத்திருந்த காட்டில் யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தபோதும் திருமால் பக்தி தொடர்ந்தது. 

அன்றாடம், யானை ஆற்றில் நீராடி, அருகில் இருந்த தாமரைத் தடாகத்திற்குச் செல்லும். அங்கிருந்து பெரிய தாமரை மலர் ஒன்றைத் தன் துதிக்கையில் எடுத்து வந்து, திருமாலின் அர்ச்சாமூர்த்தத்தின் திருவடியில் சமர்ப்பிக்கும். 

அதே காட்டில் இருந்த பொய்கையில் தேவலர் என்ற முனிவர் நீராடிக் கொண்டிருந்தார். ஒரு கந்தர்வன் முனிவரின் காலைப் பிடித்து இழுத்து, முனிவருக்குத் துன்பம் கொடுத்தான். முனிவர் கந்தர்வனை முதலையாகப் பிறக்கும்படி சபித்தார். கந்தர்வன் சாபவிமோசனம் வேண்டினான். 

ஒரு திருமாலடியார் காலைக் கவ்வும்பொழுது, சாபம் நீங்கும் என்று முனிவர் விமோசனம் கூறினார். 

நாட்கள் சென்றன

 கஜேந்திரன் என்ற திருமால் பக்தி மிகுந்த யானையின் காலை முதலை கவ்வி இழுத்தது. தன்னை விடுவித்துக் கொள்ள யானை போராடியது. 

இறுதியில் பெருமாளே காக்க வல்லவர் என்று தெளிவு பெற்று, பெருமாளை, ‘‘ஆதிமூலமே!’’ என்று கூவியழைத்தது. 

கருட வாகனத்தில் விரைந்து வந்த பெருமாள், யானையின் காலுக்கு ஊறு விளையாமல், முதலையின் தலையைத் தன் சக்கரத்தால் கொன்றார். முதலை கந்தர்வ உருவம் பெற்றது. கந்தர்வன் பெருமாளைத் துதித்துச் சென்றான். 

இறுதியில் யானையும் மோட்சம் அடைந்தது

‘‘மூலமென்று அழைத்தேனோ யானையைப் போலே?’’ -கஜேந்திரன் என்ற யானையைப் போல் தான், பெருமாளை ‘‘ஆதிமூலமே!’’ என்று அழைத்து அருள் பெறவில்லையே !  என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:

Post a Comment