Saturday, November 5, 2016

71 -சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!

திருவாய்மொழி விளக்கம் ராமானுஜர் ஐந்து ஆசிரியர்களிடத்தில் அரிய பொருள் விளக்கங்களைக் கேட்டறிந்தவர். எனினும், தன்னுடைய இயல்பான நுண்ணறிவால் அவற்றைச் சிந்தித்துச் செயல்பட்டவர். எட்டெழுத்து மந்திரம் முதலானவற்றைத் திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டுத் தெளியுமாறு ராமானுஜருக்கு பெரிய நம்பிகள் அறிவுறுத்தினார். திருவரங்கத்திலிருந்த ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளைக் காண, பதினெட்டு முறை சென்றார்.

திருக்கோட்டியூர் நம்பிகள் உபதேசித்த திருவெட்டெழுத்து மந்திரத்தை அவ்வூர் கோபுரத்தின் மீது நின்று ஆர்வமுள்ளோர் அனைவருக்கும் உபதேசித்தார், ராமானுஜர். குருவின் கட்டளையை மீறி அவ்வாறு உபதேசித்ததால் அவருக்கு நரகம் கிட்டும் என்றார் திருக்கோட்டியூர் நம்பி. திருவெட்டெழுத்தின் பயனைப் பலர் எய்தும் பொருட்டுத் தான் ஒருவன் நரகம் செல்வது உகந்தது என்று கூறித் தன் ஆசானையும் பிரமிக்கச் செய்தார் ராமானுஜர். அத்துடன் திருக்கோட்டியூரார், ராமானுஜரை, திருமலையாண்டான் என்ற ஆசானிடம் நாலாயிரம் திவ்ய ப்ரபந்தங்களுக்கும் விளக்கம் கேட்டு அறியப் பணித்தார். 

அவ்வாறே ராமானுஜர் திருமலையாண்டானிடம் பாடம் கேட்டார். சில பாசுரங்களுக்கு, திருமலை ஆண்டான் கூறிய விளக்கங்களுக்கு மேலும் தெளிவான பொருள்கள் கூறி அவரை வியக்கச் செய்தார். ஏனெனில், ராமானுஜர் கூறிய சிறப்பு விளக்கங்கள் யாவும் ஆளவந்தார் கூறிய விளக்கங்கள் ஆகும். ஆளவந்தாரிடம் நேரில் பாடம் கேட்காத ராமானுஜர் அவர் கூறிய அதே சிறப்பு விளக்கங்களை விவரித்தது ஆண்டானுக்கு வியப்பாக இருந்தது! சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே -‘சூள்’ என்றால், சபதம் அல்லது ஆணை என்று பொருள். 

திருக்கோட்டியூர் நம்பி மறைபொருளை தகுதி அறிந்து உரைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ராமானுஜர் திருக்கோட்டியூராரிடம் மறைபொருளை எப்படியும் பெறுவது என்று சூளுரைத்து, பதினெட்டு முறை முயன்று பெற்றார். இருவரும் சூள் உரைத்து உறவு கொண்டனர். தான் அவ்வாறு உறுதியுடன் உபதேசிக்கவோ, உபதேசம் பெறவோ வாய்ப்புப் பெறவில்லையே என்று திருக்கோளூர்ப்பெண்பிள்ளை ஏங்குகிறார். - 

1 comment:

  1. ஏகலைவன் ராமானுஜ ஸ்வாமியை வணங்கி மகிழ்வோம்..நாராயணாய

    ReplyDelete